அப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுவதனால் கூடியவிரைவில் மெல்வெயார்களின் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கணணி பாதுகாப்பு மென்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான கெஸ்பர்ஸ்கை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதன் மூலம் இயங்கும் ஐபோன் மற்றும் ஐபேட்கள் பாதிக்கப்படுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள் இப் பாதிப்பு ஏற்படலாமென கெஸ்பர்ஸ்கை எதிர்வுகூறியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கெஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பிரதான தொழில்நுட்ப அதிகாரியான நிகொலாய் கிரிபனிகோவ் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபோன் சாதனங்கள் மெல்வெயார்களினால் பாதிக்கப்படுவது அரிதானதெனவும், jail-break செய்யப்படும் ஐபோன்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுவந்ததாகவும் நிகொலாய் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிலைமை அவ்வாறில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக அண்ட்ரோய்ட் இயங்குதளங்களே அதிகமாக மெல்வெயாரினால் பாதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு அதன் முன்னைய ஆண்டினை விட 400% அதிகமாக அண்ட்ரோய்ட் சாதனங்கள் மெல்வெயாரினால் பாதிப்புக்குள்ளானது.
அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளைப் போல ஐபோன்களும் தற்போது அதிகமாக விற்பனையாகிவருவதால் தற்போது ஹெக்கர்கள் அதனை நோக்கித் தமது கவனத்தினை திசைத்திருப்பியுள்ளதாகத் தெரிகின்றது.
ஐபோன்கள் மட்டுமன்றி மெக் கணனிகளும் தற்போது அதிகமாக மெல்வெயார்களின் தாக்குதலுக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 10 -12 வருடங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்டின் கணனிகள் எவ்வாறு தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டதோ அத்தகைய பாதிப்பினையே தற்போது அப்பிளும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே அப்பிள் தனது உற்பத்திகளின் பாதுகாப்புத் தொடர்பில் அதிககவனம் செலுத்தவேண்டுமென அவர்கள் எச்சரிக்கின்றனர்.
No comments:
Post a Comment