ஒரு பெரிய அழிவு, இயற்கை சீற்றங்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது அது தொடர்பான தகவல்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். இன்றைய காலத்தில் தான் கைக்குள் உலகத்தை அடக்கி விடலாமே…
ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை தவறாக பயன்படுத்துவதற்கு என்றே, ஒரு கூட்டம் இருக்கிறது கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமான மலேசிய விமானம் பற்றி தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது.
இதற்கு நடுவே பீதியை கிளப்பும் விதத்தில் பொய்த் தகவல்களும் பரப்பப்படுகின்றன.
‘‘பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்துகிடக்கிறது. எனினும் பயணிகள் பத்திரமாக உள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள்” என்ற பதிவை பேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
வழக்கம்போன்று மால்வேர் எனப்படும் கணனிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருள்களை உருவாக்கிப் பரப்பும் ஹேக்கர்களின் வேலைதான் இது.
அதுவும் இந்த வீடியோவை பிபிசி, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி அந்த வதந்தியின் ‘நம்பகத் தன்மையைக்’ கூட்ட ஹேக்கர்கள் முயல்கின்றனர்.
கூடவே, ‘Breaking News’, ‘Shocking Video’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைவிரிக்கின்றனர்.
இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் முதலில் அதைப் பகிர வேண்டும் என்றொரு நிபந்தனைக் கட்டளையையும் ஹேக்கர்கள் விதிக்கின்றனர்.
அத்துடன் அதைப் பார்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு நிபந்தனை, அதைப் பகிர்ந்தாலும் அதில் வீடியோ எதுவும் தெரிவதில்லை.
இந்த விஷயத்தின் மறுபக்கத்தில் ஹேக்கர்கள் பெருமளவிலான பணத்தை அள்ளுகின்றனர்.
அதாவது குறிப்பிட்ட வீடியோவைப் பார்க்க வேண்டுமானால் உங்கள் சுயவிவரங்கள் வேண்டும், இது ஒரு கணக்கெடுப்பு, எனவே உங்கள் சுயவிவரங்களை சரிபார்க்க அனுமதி தரவும்” என்று விதிக்கப்படும் நிபந்தனைகளை நம்பி, வீடியோ பார்க்கும் ஆர்வத்தில் தகவல்களை அளித்தால் அவ்வளவுதான்.
ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கறந்து விடுவார்கள். இந்தத் தகவல்களை வைத்துப் பெரிய அளவில் பணம் சம்பாதித்துவிடுவார்கள்.
இந்த விஷயத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மால்வேர் மென்பொருள் நிபுணர் கிறிஸ் பாய்டு எச்சரிக்கிறார்.
இதற்கு முன்பும் கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் தொடர்பாகவும் இதுபோன்ற வீடியோக்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
***தாழ்வாக பறந்த மலேசிய விமானத்தை பார்த்தோம்! மக்கள் திடுக்கிடும் தகவல்****
கடந்த 7ம் திகதி நள்ளிரவு காணாமல் போன மலேசிய விமானத்தை நாங்கள் கடத்தவில்லை என தலிபான் தீவிரவாதிகள் மறுத்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து இம்மாதம் 7ம் திகதி சீனாவுக்கு புறப்பட்ட விமானம் வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் சென்ற போது மாயமானது.
விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்த விமானத்தின் நிலை குறித்து இதுநாள் வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விமானத்தை கடத்தியிருக்கலாம் என்றும், கஜகஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பகுதியில் இருக்கக்கூடும் எனவும் கருதப்பட்டது.
30 ஆயிரம் அடியில் பறக்க வேண்டிய விமானம் ரேடார் சிக்னலிலிருந்து தப்பிக்க 5,000 அடி உயரத்தில் பறந்ததாக தகவல் வந்ததால், அநேகமாக இந்த விமானம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள மலைபாங்கான பகுதியில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் விமானத்தை தாங்கள் கடத்தவில்லை என்றும், தங்களுக்கும் கடத்தல் விவகாரத்திற்கும் சம்மந்தமில்லை எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தங்கள் நாட்டு பயங்கரவாதிகள் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை சீனாவும் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் விமானம் குறித்து மலேசியா சரியான தகவல்களை அளிக்காததால், பயணிகள் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
**விமானம் வெடித்துச் சிதறவில்லை: ஐ.நா தகவல்**
மலேசிய விமானம் வெடித்துச் சிதறியதாகவோ, மோதியதாகவோ தகவல் இல்லை என்று வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு, ஐ.நா.வின் ஆதரவுடன் செயல்படுகிற ‘சி.டி.பி.டி.ஓ.’ என்னும் முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு அமைப்பு கூறி உள்ளது.
இதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காணாமல் போன மலேசிய விமானம் வெடித்து சிதறியதாகவோ, தரையிலோ தண்ணீரிலோ மோதியதாகவோ கண்டறியப்படவில்லை என வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில், சி.டி.பி.டி.ஓ.வின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் மூலமாக விமான விபத்துக்கள் 3 அல்லது 4 தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படலாம்.
அணு குண்டு சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக, ‘சி.டி.பி. டி.ஓ. நெட்வொர்க்’கில் அணு குண்டு வெடிப்புகளையும், பூகம்பங்களையும் கண்டறிவதற்கு உலகமெங்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அணு குண்டு வெடிப்புகளை கண்டுபிடிக்க இந்த அமைப்பை நிறுவி இருந்தாலும், பெரிய விமானங்கள் வெடித்துச் சிதறுவதையும், தண்ணீரிலோ தரையிலோ மோதுவதையும் கூட இது கண்டுபிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
****தாழ்வாக பறந்ததை பார்த்தோம்- மாலை தீவு மக்கள்*****
தாழ்வான பகுதியில் பறந்துள்ளதை மாலை தீவை சேர்ந்த மக்கள் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், மாலை தீவின் குடா குவாதூ என்ற பகுதியை சேர்ந்த மக்கள் மார்ச் 8ம் திகதி காலை 6:15 மணிக்கு மிகவும் தாழ்வான பகுதியில் விமானம் பறந்ததை பார்த்தோம் என்று கூறியுள்ளனர்.
மக்கள் தாங்கள் பார்த்த விமானம் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானங்கள் போன்று வெள்ளை நிறத்துடனும், அதில் சிவப்பு கோடுகளும் காணப்பட்டது.
விமானம் வடக்கில் இருந்து தென்கிழக்காக மாலை தீவின் அட்டு தீவை நோக்கி பறந்தது என்றும், விமானம் பறந்தபோது மிகவும் நம்பமுடியாத உரத்த சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment