கூகுள் கணக்கு வைத்துள்ள ஒருவர், அதன் வீடியோ இணையத்தளமான யூடியூப்பில் வீடியோக்களை பதியலாம். இதற்கு எவ்வித நிபந்தனையும் கிடையாது.
ஆனால் இதன் சுதந்திரத்தை காரணமாக பயன்படுத்தி அரசியல் மற்றும் தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ள பலர், மிக மோசமான, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் கூகுள் நிறுவன நிர்வாகிகளுக்கு அவற்றை நீக்க வேண்டிய காரணத்தினைக் கூறி நீக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். சிலவற்றை நீக்குமாறு அரசே ஆணையிடுகிறது. சிலவற்றை நீக்க நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.
இந்நிலையில் கூகுள் தன் ஆண்டறிக்கையில் எந்த தளங்கள், தகவல்கள் எதற்காக நீக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளன.
இவற்றில் பாதிக்கும் மேலான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்பட்டன. பன்னாட்டளவில் பல அரசு நிர்வாகிகள் அரசியல் நோக்கத்திற்காகப் பல தகவல்களை நீக்குமாறு கேட்கின்றனர். தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் தகவல்களை மட்டுமே கூகுள் நீக்கி வருகிறது.
நீதிமன்றத்திலிருந்து 461 ஆணைகள் பெறப்பட்டு, இந்த ஆறு மாத காலத்தில், 6,989 பதிவுகள் நீக்கப்பட்டன. ஆணையிடப்பட்டவற்றில் 68% மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
தனிப்பட்ட முறையில் 546 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 46% நீக்கப்பட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் ஈரான் நாட்டு அரசுகள், கூகுள் நிறுவனத்திடம் அறிவிக்காமல் தாங்களே தளங்களை தடை செய்து விடுகின்றன.
போலந்து நாட்டிலிருந்து ஏஜென்சி ஒன்று குறித்து அவதூறாகவும் தவறாகவும் தகவல் தந்த தளம் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஸ்பெயின் நாட்டு நிர்வாகம் 270 வலைமனைகள் மற்றும் அவற்றில் குறிப்பிட்ட லிங்க்குள் யாவும் நீக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டது. இவை யாவும் பொது வாழ்வில் ஈடுபடுவோரைப் பற்றிய அவதூறு தளங்களாகும்.
கனடா வழங்கிய கடவுச்சீட்டு மீது ஒருவன் சிறுநீர் கழித்து, அதனை கழிப்பறையில் எறிந்துவிடும் வீடியோ பதிவினை கனடா நாட்டு அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் கூகுள் இந்த விண்ணப்பங்கள் யாவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் செய்தியாகும்.
ஆனால், தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தினர் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட 149 வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டன. ஏனென்றால் அது தாய்லாந்து சட்டத்திற்கு எதிரானதாகும்.
தீவிரவாதத்தினைத் தூண்டிய ஐந்து வீடியோ பதிவுகள், பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க நீக்கப்பட்டது. அமெரிக்க அரசு அனுப்பிய விண்ணப்பங்களில், 42% வீடியோ பதிவுகள்(187) நீக்கப்பட்டன. இவை யாவும் தனி நபர் குறித்த அவதூறுகளாகும்.
No comments:
Post a Comment